தோக்கியா: ஹாங்காங்கில் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தலின் முடிவு எதுவாக இருந்தாலும் அது சீனாவின் ஒரு பகுதி யாகவே இருக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
“ஹாங்காங்கை சீர்குலைக்க, அதன் செழிப்பு நிலையையும் நிலைத்தன்மையையும் சேதப்
படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியில் முடியும்,” என்று தோக்கியோவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் திரு வாங் கூறினார்.
ஹாங்காங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தலில் ஜனநாயகத்துக்கு ஆதரவான அரசியல்வாதிகள் அபார வெற்றி பெற்றனர். சீனா ஆதரிக்கும் தற்போதைய ஹாங்காங் அரசாங்கத்துக்கு எதிராக தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதாக இது பார்க்கப்படுகிறது.
ஹாங்காங்கில் கடந்த சில மாதங்களாக அரசாங்கத்துக்கு எதிராக வன்முறைமிக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதனால் ஹாங்காங்கில் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது.