கிழக்கு ஜெர்மனியில் அமைந்துள்ள கிரீன் வால்ட் அருங்காட்சியகத்தின் காட்சிப் பெட்டகங்களை உடைத்த திருடர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த விலை மதிப்பு மிக்க நகைகளை நேற்று (நவம்பர் 25) திருடிச் சென்றனர்.
ஐரோப்பாவின் மிகச் சிறந்த பொக்கிஷச் சேகரிப்புகளான அவை திருட்டுப்போனதாக போலிசார் தெரிவித்தனர்.
வைரங்கள், வைடூரியங்கள் பதிக்கப்பட்ட 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால நகைகளில் மூன்றை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக அருங்காட்சியக ஊழியர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
கம்பியிடப்பட்ட சன்னல் வழியாக இருவர் உடைத்து உட்புகுந்தது பாதுகாப்பு கேமராவில் பதிவாகி இருந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு சற்று முன்னதாக எச்சரிக்கை மணி ஒலித்ததாகவும் அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அதற்குள்ளாக கொள்ளையர் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
“அளவிடமுடியாத கலாசார மதிப்பு கொண்டவை,” என்று திருட்டுப்போன பொருட்களைப் பற்றி அருங்காட்சியகத்தின் இயக்குநர் கிர்க் சிண்ட்ரம் கூறினார்.
பொதுவாக அத்தகைய மதிப்பு மிக்க, தனித்துவம் வாய்ந்த பொருட்களை அவர்களால் சந்தையில் விற்க இயலாது என்று சேக்சோனி மாநிலத்தில் உள்ள அருங்காட்சியகங்களின் இயக்குநர் மரியான் ஆக்கர்மேன் கூறினார்.
அது உடைக்கப்பட்டும் உருக்கப்பட்டும் விற்கப்படக்கூடுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அது மிகவும் பயங்கரமான செயல். அதன் விலை மதிப்பைவிட கலாசார மதிப்பே மிகவும் அதிகம்,” என்றார் அவர்.
திருட்டுப்போன பொருட்களின் மதிப்பு S$1.5 பில்லியன்வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. கொள்ளைச் சம்பவத்துக்கு முன்பாக அந்தப் பகுதியின் மின் இணைப்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்கும் கொள்ளைச் சம்பவத்துக்கும் தொடர்புள்ளதா என்பது பற்றித் தெரியவில்லை.
திருட்டு நடைபெற்ற அருங்காட்சியகத்தில் இருந்த ஆகச் சிறந்த பொக்கிஷமாகக் கருதப்படும் 41 காரட் ‘டிரெஸ்டென் பச்சை வைரம்’ நியூயார்க்கின் மெட்ரோபோலிடன் கலை அருங்காட்சியகத்துக்கு கடனாக வழங்கப்பட்டிருந்ததால் அது திருட்டிலிருந்து தப்பியது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity