இந்திய-அமெரிக்க மாணவியான 19 வயது ரூத் ஜார்ஜ் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.
சிகாகோவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அமெரிக்க சமூகத்தாரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட ரூத் ஜார்ஜ் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் ‘ஹானர்ஸ்’ கல்வி பயின்று வந்தார். அவரது குடும்பத்தாரின் வாகனம் ஒன்றின் பின்னிருக்கையில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23) அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதன் தொடர்பில் 26 வயதான டோனல்ட் துர்மன் எனும் ஆடவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகாகோ மெட்ரோ ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
அந்தப் பல்கலைக்கழகத்துடன் துர்மனுக்கு தொடர்பில்லை என்று கூறப்பட்டது.
ரூத் ஜார்ஜை பாலியல் பலாத்காரம் செய்தது, அவரை கொலை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் துர்மன் மீது நேற்று (நவம்பர் 25) சுமத்தப்பட்டன.
கழுத்து நெறிக்கப்பட்டு ரூத் கொல்லப்பட்டதாக மருத்துவப் பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உடலியக்கவியல் துறையில் இரண்டாமாண்டு பயின்றார் ரூத் என்று கூறப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து ரூத்துடன் தொடர்புகொள்ள இயலவில்லை என்று பல்கலைக்கழக போலிசில் ரூத்தின் பெற்றோர் புகார் செய்தனர்.
ஹால்ஸ்டெட் ஸ்திரீட்டில் இருக்கும் கார் நிறுத்துமிடத்தில் அவரது கைபேசி இருப்பதாக அறிந்த போலிசார் அந்த இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு சொந்த வாகனத்தின் பின்னிருக்கையில் ரூத்தின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழகத்தில் ரூத்தை பின் தொடர்ந்து ஒரு ஆடவர் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
அதிகாலை 1.35 மணியளவில் கார் நிறுத்துமிடத்துக்கு ரூத் சென்றார் எனவும் அவரை அந்த ஆடவர் பின் தொடர்ந்தார் என்றும் கூறப்பட்டது.
பின்னர், அதிகாலை 2.10 மணியளவில் அந்த ஆடவர் ஹால்ஸ்டெட் ஸ்திரீட்டில் தனியாக நடந்துபோனது மற்றொரு கேமராவில் பதிவானது.
புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில், ஏற்கெனவே குற்றப் பின்னணி கொண்ட துர்மன் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் பிடிபட்டான்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity