புத்ராஜெயா: போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டிருந்த ஆஸ்திரேலிய மாது மரியா எல்விரா பிண்டோ எக்ஸ்போஸ்டோ, 54, அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு விரைவில் நாடு திரும்பவுள்ளார்.
நான்கு பிள்ளைகளுக்குத் தாயாரான மரியா, 2014ஆம் ஆண்டில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் மேற்பட்ட methamphetamine போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் நடந்த வழக்கு விசாரணையில், இணையம் மூலம் அறிமுகமான ஆண் நண்பர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு மரியாவுக்குத் தெரியாமல் அவரது பயணப்பையில் போதைப்பொருள் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மரியா குற்றமற்றவர் எனக் கருதிய மலேசிய உயர் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு டிசம்பரில் அவரை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்திருந்தது.
எனினும், இதை எதிர்த்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து மரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக மரியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு, அவரை போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்த மரியா, விரைவில் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.