டிரானா: ஐரோப்பா கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அல்பேனியாவில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது அறுவர் உயிரிழந்ததோடு 150 பேர் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்பேனிய தலைநகர் டிரானாவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது.
அல்பேனிய கடற்கரை பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்களும் வீடுகளும் குலுங்கின. வீட்டின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அனைவரும் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். டர்ரெஸ் நகரில் உணவகம் ஒன்று முற்றிலும் இடிந்து விழுந்து நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த செப்டம்பரில் அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.