வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிராக நடைபெற்று வரும் பதவி நீக்க விசாரணையில் கலந்து கொள்ளுமாறு திரு டிரம்ப்பிற்கு அமெரிக்க நாடாளுளுமன்ற நீதித்துறை குழுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணையில் திரு டிரம்ப் கலந்துகொள்ளலாம்; அல்லது விசாரணை நடைமுறைகளை குறை கூறுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அக்குழுவின் தலைவரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜெரால்டு நட்லர் கூறியுள்ளார். திரு டிரம்ப், அந்த விசாரணையில் கலந்துகொண்டால் விசாரணையின்போது சாட்சியமளிப்பவர்களை அவர் கேள்விகள் கேட்க முடியும் என்று திரு நட்லர் கூறினார். கடந்த ஜூலை மாதம் திரு டிரம்ப்பிற்கும் உக்ரேனிய அதிபர் ஜெலன்சிக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து பதவி நீக்க விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனை விசாரிக்குமாறு உக்ரேன் நாட்டு அதிபர் ஜெலன்சியை திரு டிரம்ப் அந்த தொலைபேசி உரையாடலின்போது கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
உக்ரேன் நிறுவனத்திற்காக பணியாற்றிய ஜோ பைடனின் மகனையும் ஜோ பைடனையும் விசாரிக்க வேண்டும் என்று உக்ரேனுக்கு திரு டிரம்ப் நெருக்குதல் கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.
ஜோ பைடனையும் அவரது மகனையும் விசாரிக்கவில்லை என்றால் உக்ரேனுக்கான அமெரிக்க ராணுவ உதவி நிறுத்தப்படும் என்று திரு டிரம்ப் மிரட்டல் விடுத்தாரா என்பது குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.