ஹாங்காங்: ஹாங்காங் பல்கலைக் கழகத்தில் நீடித்த ஆர்ப்பாட்டம் காரணமாக அதற்கு அருகில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை இணைப்பான துறைமுக சுரங்கப்பாதை இதுநாள் வரை மூடப்பட்டிருந்தது.
தற்போது அந்த பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் யாரும் தென்படவில்லை என்று பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதால் போலிசாரின் பல்கலைக்கழக முற்றுகை முடிவுக்கு வரவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் இதுநாள் வரை மூடப்பட்டிருந்த துறைமுக சுரங்கப்பாதை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இதனை அடுத்து போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்த்து அமைதி காக்க வேண்டும் என்று ஹாங்காங் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஹாங்காங்கில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் அதிக இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஹாங்காங்கில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும், அங்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை சீன அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். ஹாங்காங் எல்லைக்கு அப்பால் சென்ஷென் நகரில் நெருக்கடி உத்தரவு மையத்தை சீனத் தலைவர்கள் அமைத்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹாங்காங் தேர்தலில் மாவட்ட நிர்வாகிகளுக்கான 452 இடங்களில் 86 விழுக்காடு இடங்களை ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜனநாயக சீர்திருத்தத்தை வலியுறுத்தி இவ்வார இறுதியில் மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
ஹாங்காங் சுதந்திரத்தில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக் காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முக்கிய ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ஆதரவாளர்களும் அலுவலக ஊழியர்களும் நேற்று ஹாங்காங் மத்திய வர்த்தக வட்டாரத்தில் போராட்டத்தில் ஈடு பட்டனர்.