ரோமானியாவிலுள்ள மிடியா துறைமுகத்திலிருந்து சவூதி அரேபியாவை நோக்கிக் கிளம்பிய ‘குவீன் ஹிண்ட்’ எனும் சரக்குக் கப்பல் ஒன்று கிளம்பிய சிறிது நேரத்துக்குள்ளேயே திடீரென கடலில் மூழ்கியது.
அதில் 14,500க்கும் அதிகமான ஆடுகள் ஏற்றிச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
அந்தக் கப்பலில் சிரியாவை சேர்ந்த மாலுமிகள் 22 பேர் இருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) புறப்பட்ட அந்தக் கப்பல், சிறிது நேரத்திலேயே கவிழ்ந்தது. கப்பலில் இருந்த மாலுமிகளுடன் அனைத்து ஆடுகளும் நீரில் மூழ்கின.
இதையடுத்து, உள்ளூர் போலிசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோரக் காவல்படையினர் ஆகியோரை கொண்ட கூட்டு மீட்பு குழு தீவிர மீட்பு பணியில் இறங்கியது.
மாலுமிகள் 22 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கப்பலைச் சுற்றி நீந்திக்கொண்டிருந்த 33 ஆடுகளை மீட்பு குழுவினர் மீட்டனர். பெரும்பாலான ஆடுகள் கடலில் மூழ்கியிருக்கும் என்று கருதப்படுகிறது.
கப்பல் மூழ்கியதற்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விலங்குகளை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அதிகாரிகள், அண்மைய சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity