பாதசாரிகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் சாலைகளை அமைக்கும் குறிக்கோளுடன் தாய்லாந்து ஒரு மாறுபட்ட முயற்சியில் இறங்கியுள்ளது.
தாய்லாந்தின் பேங்காக் நகரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு வெளியே, வரிக்கோட்டுப் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அது வழக்கமான வரிக்கோட்டுப் பாதையாக இல்லாமல் அந்தரத்தில் மிதப்பது போன்று காட்சியளிக்கிறது.
வெள்ளை பலகைகள் மிதப்பது போன்று புலப்படுவதைக் கூர்ந்து பார்ப்பதற்காகவே ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை மெதுவாகச் செலுத்துவதாக கூறப்படுகிறது.
நாட்டின் அரசு சேமிப்பு வங்கி வழங்கிய நிதியைக்கொண்டு மாணவர்களும் தொண்டூழியர்களும் இந்த அற்புத வரிக்கோட்டுப் பாதையை அமைத்தனர்.
அதிக எண்ணிக்கையிலான பாதசாரிகள் பயன்படுத்தும் இடங்களைக் குறிவைத்து இவர்கள் பள்ளிகள், கோவில்கள் ஆகியவற்றின் அருகே இதுபோன்ற பாதைகளை வரைந்தனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் பாதசாரிகள் சம்பந்தப்பட்ட 10,672 விபத்துகள் தாய்லாந்து சாலைகளில் நடந்துள்ளதாகவும் அவற்றில் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் இம்மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்தப் புதுமையான சாலைக் கடப்பு முறையைத் தொடங்கியுள்ள குழு, அடுத்த ஆறு வாரங்களில் இதே போன்று குறைந்தது மூன்று திட்டங்களை நிறைவேற்றவுள்ளது.
படம்: ராய்ட்டர்ஸ்