ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து தலையிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிடாவிட்டாலும் இவ்வாறு தலையிடுவது அதிக வெறுப்பைத் தூண்டிவிடுவதாகவும் இதன் குறிக்கோள் வஞ்சனை மிக்கதாகவும் உள்ளது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறியது.
சீனாவின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவான மசோதாவில் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார்.
சீனாவின் விவகாரங்களில் தலையிடும் செயல் இது என்று சுட்டியதுடன் அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வியிலேயே முடியும் என்றும் கூறியது.
“அமெரிக்கா பஞ்சாயத்து செய்ய வேண்டாம் என்பதே எங்களின் அறிவுரை. அப்படிச் செய்தால் சீனா அதற்கு எதிர் நடவடிக்கை எடுக்கும். அதனால் ஏற்படக்கூடிய அனைத்து விளைவுகளையும் அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும்,” என்று அறிக்கை எச்சரித்திருந்தது.
இதன் தொடர்பில் அமெரிக்கத் தூதரான டெரி பிரான்ஸ்டாட்டை நேற்று தொடர்புகொண்ட சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் லெ யுசெங், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும் இருதரப்பு உறவுகளில் மேலும் சேதத்தை ஏற்படுத்துவதையும் உடனே நிறுத்துமாறு உத்தரவு இட்டார்.
மசோதா ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தவறான அறிகுறியாகிவிடும் என்று கூறி நேற்று ஹாங்காங் அரசும் அமெரிக்க அரசுக்கு எதிராகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.
மனித உரிமைகள், ஜனநாயகம் என்ற பேரில் ஹாங்காங்கில் வன்முறை வெடித்துள்ள நிலையை அமெரிக்காவும் சில அரசியல்வாதிகளும் உணரத் தவறிவிட்டனர் என்று கூறி ஹாங்காங்கின் அரசு தொடர்பு அலுவலகமும் அறிக்கை வெளியிட்டது.
ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் சட்டத்தின்படி நாட்டின் சாதகமான வர்த்தக நிலையை ஆண்டுக்கு ஒரு முறை அமெரிக்க அதிபர் ஆய்வு செய்திடவேண்டும்.
இதற்கிடையே, ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்ட பலதுறை பல்கலைக்கழக வளாகத்தினுள் நேற்று ஹாங்காங் போலிசார் நுழைந்து, பெட்ரோல் குண்டுகளையும் வேறு ஆபத்தான ஆயுதங்களையும் தேடும் பணியில் இறங்கினர்.