‘பறக்கும் கார்’ திட்டம் குறித்து மலேசிய நாடாளுமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் முயற்சி என பிரபலப்படுத்தப்பட்டபோதும் ‘பறக்கும் கார்’ திட்டம் 20 மில்லியன் ரிங்கிட் (S$6.5 மி.) அரசாங்க நிதியாதரவைப் பெற்றிருப்பதாக மலேசிய நாடாளுமன்றத்தின் பொது கணக்காய்வாளர் குழு (பிஏசி) கூறியுள்ளது.
தொழில் மேம்பாட்டு அமைச்சர் ரிஸ்வான் முகமட் யூசோப், இதனைத் தனியார் முயற்சி என்று கூறினாலும், உயர் தொழில்நுட்பத்துக்கான மலேசிய தொழில்துறை-அரசாங்க குழுமமான ‘எம்ஐஜிஎச்டி’, ‘ஏரோடைன் வென்ச்சர்ஸ் செண்டெரியான் பெர்ஹாட்’ (ஏவிஎஸ்பி) நிறுவனத்தில் 20 மில்லியன் ரிங்கிட்டை முதலீடு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் பொது கணக்காய்வாளர் குழு தெரிவித்தது.
ஏவிஎஸ்பி நிறுவனத்திற்கு நவம்பர் முதல் தேதியன்று பணம் மாற்றப்பட்டத்தை பொருளியல் விவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை கூறியது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அமைச்சர் ஏவிஎஸ்பி நிறுவனத்தை வெளிப்படையாக விளம்பரப்படுத்தி வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
எனினும், ஏவிஎஸ்பி நிறுவனத்துக்கு ‘பறக்கும் கார்’ திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நிதி, அறிவுசார் சொத்துரிமை, நிபுணத்துவம் அல்லது மேம்பாட்டுத் திறன் உள்ளதா என்பது குறித்து அரசாங்கம் தேவையான ஆய்வைச் செய்யவில்லை. விரிவான திட்டமிடலின்றி அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்படாமல் ‘பறக்கும் கார்’ மேம்பாட்டுத் திட்டம் குறித்து அமைச்சர் முன்கூட்டியே அறிவித்துள்ளார் என்று அறிக்கை கூறியது.