காபூல்: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடும் அமெரிக்க துருப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்நாட்டிற்கு திடீர் ரகசிய பயணம் மேற்கொண்டார் அமெரிக்க அதிபர்
டோனல்ட் டிரம்ப்.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் பக்ராம் வான்வெளித் தளத்திற்கு அதிபர் டிரம்ப்பின் விமானம் சென்றடைந்தது.
சுமார் இரண்டரை மணி நேரம் அங்கிருந்த அவர், அமெரிக்க படையினருக்கு நன்றி தெரிவித்ததோடு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆப்கானில் சுமார் 12,000 அமெரிக்க துருப்புகள் உள்ளனர்.
டிரம்பின் இந்தப் பயணம் குறித்து கடைசி வரை ரகசியம் காக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, மேலும் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, டிரம்ப்பின் முதல் ஆப்கான் பயணம் இது.
“நாங்கள் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறோம். முதலில் போர் நிறுத்தம் விரும்பாத தலிபான்கள் இப்போது போர் நிறுத்தத்தை விரும்புகின்றனர். நான் அப்படித்தான் நம்புகிறேன்,” என்றார் டிரம்ப்.
2016ஆம் ஆண்டு தன் தேர்தல் பிரசாரத்தில் அமெரிக்காவின் முடிவற்ற போர்களை நிறுத்துவோம் என்றார் டிரம்ப்.
ஆப்கானிலிருந்தும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் அமெரிக்க படைகளைத் திரும்பப் பெற டிரம்ப் விரும்பினார். ஆனால் இதற்கு முன்னிலை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற நாடுகளின் பிரச்சினைகளை அந்தந்த நாடுகள்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர் டிரம்ப்.
ஏனெனில் 18 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட இந்த ஆப்கான் படையெடுப்பினால் ஆயிரக்கணக்கான ஆப்கான் குடிமக்களும் 2,400 அமெரிக்கப் படையினரும் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.