ஹாங்காங்: இவ்வாண்டு ஜூன் மாதம் ஹாங்காங்கில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் அங்குள்ள பலதுறைத் தொழிற்கல்லூரி பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மாணவர்கள் போலிசாருடன் மோதியபோது ஆர்ப்பாட்டம் உச்சகட்டத்தை எட்டியது.
ஆர்ப்பாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ஹாங்காங் போலிசார் பல்கலைக்கழக வளாகத்தை முற்றுகையிட்டனர்.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் நீடித்த இந்த முற்றுகையைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மாணவர்களை போலிசார் கைது செய்தனர். இதன் பின்னர், பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எவரும் பதுங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட போலிசார் நேற்று பல்கலைக்கழகத்தை முறைப்படி அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
பல்கலைக்கழகத்தைச் சோதனையிட்ட போலிசார் அங்கு சுமார் 4,000 பெட்ரோல் குண்டுகள், மற்ற வெடிபொருட்கள், போத்தல்களில் அடைக்கப்பட்ட அமிலப் பொருட்கள் ஆகியவற்றைக் கண்டெடுத்தனர்.
ஹாங்காங் பல்கலைக்கழக முற்றுகை அமைதியாக முடிவுக்கு வந்ததாக கூறப்படும் நிலையில் அதிகாரிகள் நேற்று பல்கலைக்கழகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகக் கூறினர்.
ஹாங்காங்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக அறியப்படும் சந்தேக நபர்களை சீனாவுக்கு நாடு கடத்த வழிசெய்யும் சட்டம் தொடர்பாக ஜூன் மாதம் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
பின்னர், விரிவான தேர்தல்கள், போலிஸ் வன்முறைக்கு எதிராக விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவை நீடித்தன.
இம்மாதம் மாணவர் ஒருவர் போலிஸ் நடவடிக்கையின்போது கார் நிறுத்த இடத்திலிருந்து விழுந்து மாண்ட சம்பவத்தை அடுத்து ஆர்ப்பாட்டங்கள் பெரிய அளவில் உருவெடுத்தன.
ஹாங்காங்கிலுள்ள சீன பல்கலைக்கழகத்தை நவம்பர் மத்தியில் மாணவர்கள் ஐந்து நாட்களுக்கு ஆக்கிரமித்தபோது நாட்டின் பல பள்ளிகளில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.