லண்டன் மாநகரில் பல பேரை கத்தியால் குத்திய ஆடவரை போலிசார் சுட்டுக் கொன்றுவிட்டனர். தாக்குதல்காரர் 28 வயது உஸ்மான் கான் என அடையாளம் காணப்பட்டார். மேலும், இதற்கு முன்னர் பயங்கரவாதக் குற்றங்களுக்காக சிறைவைக்கப்பட்டவர் இவர் என்ற விவரம் வெளிவந்துள்ளது.
லண்டன் பிரிட்ஜில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மக்கள் தலைதெறிக்க ஓடினர். மர்ம ஆசாமி ஒருவர் கண்ணில் காண்போரை எல்லாம் கத்தியால் குத்துவது தெரிந்ததும் பலரும் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடினர்.
இருப்பினும் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று போலிசார் அறிவித்துள்ளனர்.
போலிசார் விரைந்து வந்தபோது தாக்குதல்காரரை பொதுமக்கள் பிடித்துவிட்டனர். இருப்பினும் தப்பிக்க முயன்றபோது அதிகாரிகள் அவரை சுட்டுவீழ்த்தினர். இந்தத் தாக்குதல் தொடர்பான தேடுதல் வேட்டையை போலிசார் ஸ்டாஃபர்ட் பகுதியில் மேற்கொண்டனர். இந்நிலையில், 2012ஆம் ஆண்டு உஸ்மான் கான் பயங்கரவாதக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் 2018 டிசம்பரில் உரிமத்தின் அடிப்படையில் அந்த நபர் விடுவிக்கப்பட்டதாகவும் லண்டன் பெருநகர காவல்துறை துணை ஆணையாளர் நீல் பாசு கூறினார்.
வெளியில் விடப்பட்ட அந்த முன்னாள் குற்றவாளி புதிய தாக்குதலை மேற்கொண்டதன் பின்னணியை விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
தமது நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் உடலில் மின்னணு சில்லுவை பொருத்திக்கொள்ள ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து உஸ்மான் கான் விடுதலை செய்யப்பட்டதாக ‘த டைம்ஸ்’ செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
சம்பவத்தைக் கேள்விப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், தேர்தல் பிரசாரத்தை பாதியில் முடித்துவிட்டு தமது அலுவலகம் திரும்பினார்.
“கொடூரமான குற்றவாளியை முன்கூட்டியே விடுவித்தது தவறு. இதுபோன்ற நடைமுறைகளில் இருந்து வெளிவரவேண்டியது அவசியம். குற்றவாளிகளுக்கு, குறிப்பாக, பயங்கரவாதிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்,” என்று கூறிய ஜான்சன், தாக்குதல்காரரை துணிச்சலுடன் தடுத்துப் பிடித்தவர்களைப் பாராட்டினார்.
பிரிட்டனில் வரும் 12ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்னர் 2017 ஜூனில் தேர்தல் நடைபெற இருந்த சமயத்திலும் பல்வேறு தாக்குதல்கள் நிகழ்ந்தன. ஜூன் 3ஆம் தேதி இதே லண்டன் பிரிட்ஜில் அப்போதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் எட்டுப் பேர் உயிரிழந்ததோடு 48 பேர் காயமுற்றனர்.