கோலாலம்பூர்: மலேசியாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பிகேஆர் எனப்படும் கெஅடிலான் கட்சி ஆண்டுக் கூட்டம் தொடர்பில் கட்சிக்குள் தவறான செய்திகளைப் பரப்பி வேண்டுமென்றே உறுப்பினர்களைக் குழப்பிவருவோரை கெஅடிலான் இளைஞர் அணி உதவித் தலைவர் சையத் பாட்லி ஷா சையத் ஒஸ்மான் கடுமையாகச் சாடினார்.
“கட்சியின் அதிகாரபூர்வ நடவடிக்கைகளை மீறும் எண்ணம் கொண்டவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி புதுக்கட்சி அமைத்துக் கொள்ளலாம்,” என சையத் பாட்லி ஷா ஓர் அறிக்கையில் கூறினார். கெஅடிலான் இளைஞர் தேசிய காங்கிரசுக்கு ஒரே ஒரு தொடக்க விழாதான் உண்டு, அதற்கு பிகேஆர் ஆலோசனை மன்றத் தலைவர் டாக்டர் வான் அசிசா தலைமை தாங்குகிறார் என்பதை அவர் வலியுறுத்தினார்.
“கட்சியின் மத்திய தலைமை மன்றம் செய்த முடிவுக்கு மாறாக நடத்தப்படும் நிகழ்வுகள் அதிகாரபூர்வ நிகழ்வாகக் கருதப்படாது” என்று கூறியவர் அனைத்து தரப்பினரும் பிகேஆர் பெயரைச் சொல்லி மக்களைக் குழப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று சொன்னார். பிகேஆரின் இளைஞர் பிரிவு காங்கிரசை யார் தொடங்கி வைப்பது என்பதில் சர்ச்சை நீடிக்கிறது. அக்கட்சி துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆதரவாளர்கள் அஸ்மின்தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அஸ்மின் அலிக்கு அனுப்பப்பட்ட அழைப்பு மீட்டுக்கொள்ளப்பட்டு வான் அசிசா கூட்டத்தைத் தொடக்கிவைக்க அழைக்கப்பட்டிருப்பதாக பிகேஆர் இளைஞர் அணித் தலைவர் அறிக்கை வெளியிட்டதை அடுத்து சர்ச்சை மூண்டது.