இந்தியா உதவ முன்வராவிட்டால் சீனாவையே நாடுவோம்: கோத்தபய

2 mins read
f5f38227-8188-48f7-b6c3-72ec6d1452db
இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்யாவிட்டால் மறுபடியும் நிதி உதவிக்காக சீனாவை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். படம்: ஊடகம் -

இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்யாவிட்டால் மறுபடியும் நிதி உதவிக்காக சீனாவை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். மாற்று நிதி உதவி கிட்டாத இதர ஆசிய நாடுகள்கூட சீனாவின் பிரம்மாண்டமான 'பெல்ட் அண்ட் ரோடு' உள்கட்டமைப்புத் திட்டத்தை அணுக வேண்டி இருக்கும் என்றும் அவர் இந்தியாவின் 'த இந்து' நாளிதழிடம் கூறியுள்ளார்.

இலங்கை பல்லாண்டு காலமாக இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. ஆயினும் 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சுமார் பத்தாண்டு காலம் அதிபராகப் பதவி வகித்த மகிந்த ராஜபக்சே சீனாவுடன் நெருக்கமாக இருந்தார். முதலீடாகவும் கடன்களாகவும் 7 பில்லியன் டாலர் (S$9.57 பில்லியன்) வரை சீனாவிடம் உதவிபெற அவர் ஒப்பந்தம் போட்டார்.

இந்நிலையில் சென்ற மாதம் 16ஆம் தேதி புதிய அதிபராகப் பொறுப்பேற்ற மகிந்தவின் தம்பி கோத்தபய ராஜபக்சே மூன்று நாள் அதிகாரத்துவப் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா சென்றார்.

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய எந்தவோர் அம்சத்தையும் தமது அரசாங்கம் செய்யாது என்ற அவர் முதலீட்டுக்கான அழைப்புகளை விடுத்தார்.

"இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்றவையும் இன்னும் பல நாடுகளும் தங்களது நாட்டில் உள்ள நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இலங்கை வளர்ச்சி பெறும்.

"அவ்வாறு செய்யாவிட்டால் இலங்கையைப் போல பிற ஆசிய நாடுகளுக்கும் பிரச்சினை எழலாம். நாடுகள் ஒன்றுக்கொன்று உதவாவிட்டால் சீனாவை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஹம்பன்தோட்டா துறைமுகம் போன்ற உத்திபூர்வ முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் உள்ளது," என்று திரு கோத்தபய தமது

பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.