ஹாங்காங்: ஹாங்காங்கில் நேற்று ஆயிரக்கணக்கானோர் மீண்டும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினர். அரசாங்கத்துக்கு எதிராக முழக்கமிட்டுக்கொண்டே முக்கிய வர்த்தக வட்டாரமான சிம் சா சுவீயில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.
அதற்கு முன்னதாக நூற்றுக்கணக்கானோர் ஹாங்காங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அணிவகுத்துச் சென்றனர். ஹாங்காங்கில் ஏறக்குறைய ஆறு மாதங்களாக நடந்து வரும் போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இது அமைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் அமெரிக்கக் கொடி ஏந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஹாங்காங்கின் கலவரத் தடுப்புப் போலிசார் போராட்டம் நிகழும் இடத்தில் கூடினர். போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட இடத்தைவிட்டுச் சென்று வேறு இடங்களிலும் போராட்டம் நடத்த முயன்றோர் மீது போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மிளகு நீர் பாய்ச்சி அவர்களை மீண்டும் அனுமதிக்கப் பாதைக்குத் திருப்ப போலிசார் முயன்றனர்.
மாலை 4.45 மணி அளவில் ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் போலிசார் மீது செங்கற்களை எறிந்ததால் அவர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து, பேரணி மாலை 5 மணிக்கு நிறைவடையும் என்று அதற்கு ஏற்பாடு செய்திருந்தவர் அறிவித்தார்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட ஒரு மணி நேரம் முன்னதாகவே பேரணி முடிந்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு போராட்டம் நடைபெற அனுமதிக்கப்பட்ட பாதையில் இருந்தோரை போலிசார் அங்கிருந்து வெளியேற்றினர். பேரணி முடிந்த பிறகு அங்கு தொடர்ந்து கூடுவது சட்டவிரோதமாகும் என்று போலிசார் தெரிவித்தனர்.