பிலிப்பீன்ஸின் லுசொன் தீவை கம்முரி சூறாவளி நெருங்கி வருவதால், சில விமான நிறுவனங்கள் விமானப்பயணங்களை ரத்து செய்ததோடு, உள்ளூர் அதிகாரிகள் பள்ளிகளை மூடியுள்ளனர்.
டிசொய் என உள்ளூரில் அழைக்கப்படும் கம்முரி சூறாவளி, மணிக்கு 150 கிலோமீட்டர் மத்திய வேகத்தில், மணிக்கு 185 கிலோமீட்டர் காற்றலைகளுடன் நெருங்கி வருவதாக பிலிப்பீன்ஸ் வானியை ஆய்வகம் தெரிவித்தது.
இவ்வாண்டு பிலிப்பீன்ஸைத் தாக்கும் 20வது சூறாவளி இது. சென்ற 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிலிப்பீன்ஸைத் தாக்கி 106 பேரைக் கொன்று, 38.6 பில்லியன் பெசோ (1.04 பில்லியன் வெள்ளி) சேதத்தை ஏற்படுத்திய ரம்மசன் சூறாவளியைப் போலவே கம்முரி சூறாவளி தாக்கவிருக்கிறது.
திங்கட்கிழமை மாலை அல்லது செவ்வாய்க்கிழமை காலை கட்டன்டுவானஸ் அல்லது அல்பே மாவட்டத்தைச் சூறாவளி தாக்கும் என வானிலை ஆய்வகம் முன்னுரைக்கிறது.
இந்நிலையில், சிபு ஏர், பிலிப்பீன்ஸ் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் சில உள்நாட்டு விமானச்சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. பல்வேறு மாவட்டங்களிலும் மெட்ரோ மணிலாவின் சில பகுதிகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்குச் சுறாவளியால் ஏதேனும் இடையூறு நேர்ந்தால், போட்டிகளைத் தொடர்வதற்கு அவசரகாலத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
சில வெளிப்புற விளையாட்டுகள் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஏபிஎஸ்-சிபிஎன் நியூஸ் தெரிவித்தது.