ஐந்து மொழிகளில் சாலை அறிவிப்புப்பலகைகள்

மலாக்காவின் 15 பழமைவாய்ந்த தெருக்களில் உள்ள சாலை அறிவிப்புப்பலகைகள் இப்போது ஐந்து மொழிகளில் இடம்பெற்றுள்ளன. பன்முகத்தன்மை வாய்ந்த கலாசாரத்தையும் பல்லினச் சமுதாயத்தையும் பிரதிபலிப்பது இந்த மாற்றத்தின் நோக்கம்.

ஐந்து மொழிகளிலான முதல் சாலை அறிவிப்புப்பலகை சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் துக்காங் எமாஸ் சாலையில் மலாக்கா மாநில அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. ஓர் ஆண்டுக்குக் கருத்துகளைச் சேகரித்த பின், இப்போது 15 சாலைகளில் சீனம், மலாய், ஆங்கிலம், தமிழ், ஜாவி ஆகிய ஐந்து மொழிகளில் அறிவிப்புப்பலகைகள் இடம்பெற்றுள்ளன.

நீல, பச்சை நிறத்திலான இப்புதிய சாலை அறிகுறிகளை நிறுவுவதற்கு மன்றம் 6,000 ரிங்கிட் ($1,965) செலவிட்டது.

அறிவிப்புப்பலகைகளில் சாலைப்பெயர் மலாய் மொழியில் பச்சை நிறத்தில் பெரிதாக இடம்பெற்றிருக்கிறது. சீனம், தமிழ், ஜாவி ஆகிய மொழிகள் நீல நிறத்தில் இருக்கின்றன. ஆங்கில மொழி கடைசி வரிசையில் உள்ளது.

இந்தப் பன்மொழி அறிவிப்புப்பலகைகள் மலாக்காவின் பல இன ஒற்றுமையை பிரதிபலிப்பதாகவும், சிங்கப்பூர், சீனா, இந்தோனீசியா, மேற்கத்திய நாடுகள் ஆகிய இடங்களிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளை வரவேற்பதற்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் மலாக்கா மாநில வீடமைப்பு, அரசாங்க, சுற்றுப்புறக் குழுத் தலைவர் டே கோக் கியூ கூறினார்.

யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தளத்திலுள்ள ஒவ்வொரு பழைய தெருவுக்கும் தனிப்பட்ட வரலாறும் முக்கியத்துவமும் உள்ளதாகத் திரு டே குறிப்பிட்டார். நிபுணர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்ற பின், மாநில அரசாங்கம் ஐந்து மொழிகளுடன் சாலை அறிவிப்புப்பலகைகளை நிறுவ முடிவுச் செய்தது.