இந்த வாரம் முழுவதும் மதிய உணவு வேளையின்போது ஹாங்காங்கின் வர்த்தக வட்டாரத்தில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் கடந்த சில மாதங்களாக அரசாங்கத்துக்கு எதிரான வன்முறைமிக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற மாவட்ட மன்ற நிர்வாகிகளுக்கான தேர்தலில் ஜனநாயக ஆதரவு அரசியல்வாதிகள் அபார வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, ஜனநாயக இயக்கத்துக்கு ஆதரவாக நேற்று முதல்முறையாக மதிய உணவு வேளையின்போது போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்காக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஹாங்காங்கின் வர்த்தக வட்டாரத்தில் நேற்று கூடினர்.
மாவட்ட மன்ற நிர்வாகிகளுக்கான தேர்தலுக்குப் பிறகு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்காவுக்கு நன்றி நல்கும் வகையில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்கக் கொடியை ஏந்திக்கொண்டு அமெரிக்கத் தூதரகத்துக்குச் சென்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றபோது அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து சிலர் வெளியேறி வேறு இடத்தில் போராட்டம் நடத்த முயன்றதாகக் கூறி கலவரத் தடுப்புப் போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.
நேற்று நடைபெற்ற மதிய உணவு வேளை போராட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல் ஏற்படவில்லை.
போராட்டத்திற்குப் பிறகு சிலர் தங்கள் அலுவலகங்களுக்குத் திரும்பினர்.
மற்றவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.
கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களில் பலதரப்பு மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.