லண்டன்: பிரிட்டனின் லண்டன் பிரிட்ஜ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேறிய பயங்கரவாதத் தாக்குலில் உயிரிழந்த இருவரின் அடையாளங்களை பிரிட்டிஷ் போலிசார் நேற்று வெளியிட்டனர்.
கிழக்கு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷியர் பகுதியைச் சேர்ந்த 25 வயது ஜேக் மேரிட், வார்விக்ஷியர் பகுதியைச் சேர்ந்த 23 வயது சாஸ்கியா ஜோன்ஸ் ஆகியவர்கள் அந்த இருவர்.
பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் கழகத்தில் பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளராக மெரிட் பணிபுரிந்ததாகவும் ஒரு தொண்டூழியராக ஜோன்ஸ் சேவை புரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகளின் மறுவாழ்வுத் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்க லண்டன் பிரிட்ஜ் அருகே நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய உதவிக்கொண்டிருந்தனர்.
உஸ்மான் கான் என அடையாளம் காணப்பட்ட 28 வயது நபர் ஒருவர், அவர்களைக் கத்தியால் குத்தினார். போலி வெடிபொருள் வைக்கப்பட்ட அரைச்சட்டையை அணிந்திருந்த அந்த நபரை போலிசார் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், 2012ஆம் ஆண்டு உஸ்மான் கான் பயங்கரவாதக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறைத் தண்டனையில் பாதியளவு நிறைவேற்றிவிட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் உரிமத்தின் அடிப்படையில் அந்த நபர் விடுவிக்கப்பட்டதாகவும் லண்டன் பெருநகர காவல்துறை துணை ஆணையாளர் நீல் பாசு கூறினார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த முன்னாள் குற்றவாளி புதிய தாக்குதலை மேற்கொண்டதன் பின்னணியை விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, நேட்டோ உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று லண்டனுக்குப் புறப்பட்டார்.
இம்மாதம் 12ஆம் தேதி பிரிட்டனில் தேர்தல் நடைபெறவுள்ள வேளையில், திரு டிரம்ப்பின் வருகை முக்கியம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.