கோத்தா பாரு: மலேசியாவின் கிளந்தான் மாநிலம், குவாலா திரங்கானு பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 7 வயது சிறுவன் மரணமடைந்துள்ளான்.
அவனுடைய உடல் கிளந்தானின் பாசிர் பூத்தே பகுதியில் உள்ள நெல் விளையும் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
அந்தச் சிறுவன் தனது உறவினர் ஒருவருடன் பாசனப் பகுதியில் உள்ள கால்வாய்க்கு சென்றதாகவும் அங்கு கால் தவறி வெள்ள நீர் நிரம்பி வழிந்த அந்தக் கால்வாயில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
அவனது உடல் விழுந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 400 மீட்டர் தொலைவிலுள்ள பகுதியில் தேடுதல், மீட்புப் பணியினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக கிளந்தான் மாநில போலிஸ் தலைமைத் தளபதி ஹசனுதின் ஹசான் தெரிவித்து உள்ளார்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வெள்ளப் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கிளந்தான் மாநிலத்தின் ஏழு வட்டாரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில், கிளந்தான் தலைநகர் கோத்தா பாருவுடன் திரங்கானு மாநிலத்தின் இரண்டு வட்டாரங்களும் உள்ளடங்கும் என்று மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை சுமார் 7.00 மணி நிலவரப்படி, திங்கட்கிழமை மட்டும் திரங்கானுவில் துயர் துடைப்பு மையங்களை நாடி வந்தவர்களின் எண்ணிக்கை 5,935 பேர் என்று கூறப்படுகிறது.
இது, ஞாயிறன்று 2,387 என்ற எண்ணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு உதவ திரங்கானுவில் திங்கட்கிழமை மட்டும் 60 துயர் துடைப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் சேர்த்து திரங்கானு மாநிலத்தில் மொத்தம் 126 துயர் துடைப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, துயர் துடைப்பு மையங்களில் இடம் கிடைக்கும் வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாகனங்களிலும் மலிவு கட்டண ஹோட்டல்களிலும் தஞ்சம் அடைந்ததாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.