மலேசியாவில் வெள்ளம்: பலர் பாதிப்பு

கோலாலம்பூர்: மலேசியாவின் கிழக்கு மாநிலங்களான திரங்கானு, கிளந்தானில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் 16,000க்கும் மேற்பட்டோர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை மலேசியாவின் சமூக நலத் துறை நேற்று வெளியிட்டது.

கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியிலிருந்து கனமழை பெய்து வருகிறது.

திரங்கானுவைவிட கிளந்தானில் நிலைமை மோசமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிளந்தானில் 4,814 குடும்பங்களைச் சேர்ந்த 13,000க்கும் மேற்பட்டோர் அவர்களது வசிப்பிடங்களிலிருந்து அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் தற்போது துயர்துடைப்பு முகாம்களில் தங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதுவரை வெள்ள நீரில் மூழ்கி குறைந்தது இருவர் மாண்டதாகக் கூறப்படுகிறது.

வெள்ளம் நிரம்பிய வயல்களில் அவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

 வெள்ள நீர் மட்டம் உயர்ந்துகொண்டிருந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வனப்பகுதியில் சிக்கித் தவித்த 14 மரவெட்டிகளை அதிகாரிகள் பத்திரமாக மீட்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

திரங்கானுவில் 805 குடும்பங்களைச் சேர்ந்த 2,924 பேர்  65 துயர்துடைப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சிங்கப்பூருக்கு அருகில் இருக்கும் ஜோகூர் மாநிலமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், திரங்கானு, கிளந்தான் போல நிலைமை மோசமாக இல்லை.  அங்கு 52 பேர் அவர்களது வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாஹாங்கிலும்  வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மலேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசமான வானிலை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.