செராமிக் தொழிற்சாலையில் விபத்து; இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழப்பு

சூடான் தலைநகர் கார்ட்டூமில் செராமிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி மற்றும் தீ விபத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 23 பேர் உயிரிழந்ததாகவும் 130 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஐந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார்ட்டூமில் அமைந்துள்ள சலோமி செராமிக் தொழிற்சாலையில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த பலர் பணிபுரிகின்றனர். அதில் சுமார் 50 இந்தியர்கள் பணியாற்றி வருவதாகக் கூறப்பட்டது. 

நேற்று மாலை நடந்த இவ்விபத்தில் உயிரிழந்த 23 பேரில் இந்தியர்களும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

எரிபொருள் நிரப்பப்பட்ட டேங்கரிலிருந்து எரிவாயுவை எடுக்கும்போது திடீரென டேங்கர் வெடித்தது. எரிபொருள் வாயு தொழிற்சாலையின் பிற பகுதிகளைத் தாக்கியதால் தொழிற்சாலை தீப்பற்றி எரிந்தது.

கறுப்பு நிறப் புகை மற்றும் தீப்பிழம்புகள் விண்ணை நோக்கி உயர்ந்ததால், அருகிலுள்ள தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதாகக் குறிப்பிட்ட அதிகாரிகள், தீயை அணைக்க பெரும்பாடுபட்டதாகத் தெரிவித்தனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity