ஹாங்காங்: ஹாங்காங்கில் பேராட்டக்களமாக மாறிய பலதுறைத் தொழில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஏராளமான பெட்ரோல் குண்டுகளையும் ஆயுதங்களையும் போலிசார் கைப்பற்றி உள்ளனர். கடந்த மாதம் பத்து நாட்களுக்கும் மேலாக இந்தப் பல்கலைக்கழகத்தை போலிசார் முற்றுகை இட்டிருந்தனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தின் உள்ளே இருந்துகொண்டு வன்முறையில் ஈடுபட்டனர். அதற்காக ஆயுதங்களை அவர்கள் வைத்திருந்தனர்.
அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் படிப்படியாக அங்கிருந்து வெளியேறிய பின்னர் எஞ்சியிருந்தோரை போலிசார் கைது செய்தனர். முற்றுகை முடிவுக்கு வந்துவிட்ட பின்னர் பல்கலைக்கழக வளாகம் இழுத்து மூடப்பட்டது.
அமைதி நிலவிய வேளையில் ஆபத்துக்குரிய ஆயுதங்கள் உள்ளே இருப்பதை அறிந்த அதிகாரிகள் அவற்றை மீட்டெடுக்க போலிசாருக்கு உத்தரவிட்டனர். நவம்பர் 26ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரையில் அங்கிருந்து 4,296 பெட்ரோல் குண்டுகள், 622 ஆயுதங்கள், ரசாயனம் நிரப்பப்பட்ட 671 போத்தல்கள் போன்றவை கைப்பற்றப்பட்டதாக நேற்று முன்தினம் பின்னேரத்தில் போலிஸ் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
இவை தவிர எராளமான வில், அம்புகளும் அங்கு இருந்தன. பல்கலைக்கழக முற்றுகையின் முடிவில் 1,100 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.