'ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி, 10 வீரர்கள் தூக்கிச்சென்று ஆம்புலன்சில் ஏற்றினர்'

'ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி, 10 வீரர்கள் தூக்கிச்சென்று ஆம்புலன்சில் ஏற்றினர்'

2 mins read
f9bcc446-9ff0-471d-98e4-25e45946ff56
இடுப்பெலும்பு காயத்துக்காக மருத்துவமனையில் பாலாஜி சிகிச்சை பெற்றார். படம்: தி ஸ்டார் / ஏஷியாநெட் -

மூச்சுவிட சிரமப்பட்ட 52 வயது ஆடவர் பாலாஜியை அவர் வசிக்கும் ஒன்பதாவது மாடி வீட்டிலிருந்து அவசர சிகிச்சை வாகனத்தில் ஏற்றுவதற்கு 10 தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது.

ஆம். அதிக உடற்பருமன் கொண்ட திரு எம்.பாலாஜியின் எடை சுமார் 200 கிலோகிராம்.

நேற்று (டிசம்பர் 4) பிற்பகல் 12.30 மணியளவில் உதவி தேவைப்படுவதாகத் தகவலறிந்த போலிசார் பினாங்கில் உள்ள மேடன் அங்சானா அடுக்குமாடிக் குடியிருப்புக்கு விரைந்தனர்.

திரு பாலாஜியின் வீட்டை அதிகாரிகள் அடைந்தபோது அவர் அரை மயக்கத்தில் வீட்டுக் கூடத்தில் படுத்திருந்தார்.

சிறப்பு கம்பளி ஒன்றைப் பயன்படுத்தி 10 தீயணைப்பு வீரர்கள் மாறி மாறி பணியில் ஈடுபட்டு திரு பாலாஜியை அவசர சிகிச்சை வாகனத்தில் ஏற்றினர்.

திரு பாலாஜியின் வீட்டு வாசல் சற்று சிறியதாக இருந்ததால் அவரை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வருவதிலும் சிரமம் ஏற்பட்டது என்று பாயா டெருபோங் தீயணைப்பு நிலையத் தலைமை அதிகாரி முஸாமெர் முகமது சாலே கூறினார். அதிக பருமனுள்ள திரு பாலாஜியை மின்தூக்கியில் கொண்டு செல்வதும் சவாலாக அமைந்தது என்றார் அவர்.

தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மருத்துவமனைக்குச் செல்வது திரு பாலாஜிக்கு இது முதல்முறையல்ல.

2010ஆம் ஆண்டு கீழே விழுந்து இடுப்பில் காயமேற்பட்டபோதும், 2014ஆம் ஆண்டு இடுப்பெலும்பை முறித்துக்கொண்டபோதும் அவரை தீயணைப்பு வீரர்கள்தான் தரைத் தளத்துக்குக் கொண்டு வந்து பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்பருமனைக் குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு அவரது உடல்நிலை அனுமதிக்கவில்லை என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity