கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருமுகம் கொண்டவர்; அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சனம்

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பைக் கேலி செய்வதாக அமைந்த காணொளி ஒன்று வெளியிடப்பட்டதை அடுத்து ட்ரூடோவை ‘இருமுகம் கொண்டவர்’ என்று டிரம்ப் கூறியுள்ளார்.

நேட்டோ மாநாட்டின் ஓர் அங்கமாக நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வின்போது டிரம்ப் நடந்துகொண்டதைப் பற்றி ட்ரூடோ மற்ற உலகத் தலைவர்களிடம் கேலி செய்து பேசிய காணொளி குறித்து திரு டிரம்ப் இவ்வாறு சொன்னார்.

ஜெர்மனியின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கலைச் சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் திரு டிரம்ப்.

கனடாவின் பொருளியல் உற்பத்தியிலிருந்து அதன் ராணுவச் செலவுகளுக்காக மேலும்  இரண்டு விழுக்காட்டை ஒதுக்க டிரம்ப் தம் பிரசாரம் மூலம் அளித்து வரும் அழுத்தத்தால் ட்ரூடோ எரிச்சல் அடைந்திருக்கலாம் என்று திரு டிரம்ப் தெரிவித்தார்.

“தற்போது செலவிடுவதைவிட அவர் கூடுதலாக செலவிட வேண்டும். இதை நான் அவருக்குச் சுட்டிக் காட்டினேன். இதனால் அவருக்கு அதிருப்தி என்று எனக்குத் தெரியும். ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்,” என்றார் டிரம்ப்.

கனடிய ஊடகமான ‘சிபிசி’  இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளியில் ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரூன், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே மற்றும் அரசி எலிசபெத்தின் மகள் இளவரசி ஆன் ஆகியோர் பக்கிங்ஹேம் அரண்மனையில் பேசிக்கொண்டிருந்தனர்.

“40 நிமிட செய்தியாளர் கூட்டத்தால் தாமதம்,” என்று ட்ரூடோ கூறுவதாக காணொளியில் பதிவாகியுள்ளது. திரு டிரம்ப் அக்கூட்டத்தை இரண்டு மணிநேரமாக இழுத்ததைக் குறித்து ட்ரூடோ தம் அதிர்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு பேசி இருந்தார்.  

இதன் தொடர்பில் பேசிய ட்ரூடோ, தமக்கும் அதிபர் டிரம்புக்கும் இடையே நல்ல உறவு இருப்பதாக பதிலளித்தார்.

நேட்டோவை நடத்துவதற்கான செலவுகளுக்குக் கூடுதல் பணத்தைக் கட்ட நட்பு நாடுகளுடன் வெற்றிகரமாகக் கூட்டணி அமைப்பது தமது அதிபர் பிரசாரத்தின் ஓர் முக்கிய அம்சமாக அமைந்திருந்தது.

ஆனால் காணொளி சம்பவத்திற்குப் பிறகு நடைபெறுவதாக இருந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றை டிரம்ப் ரத்து செய்துவிட்டு திட்டமிட்டதற்கு முன்பாகவே வாஷிங்டனுக்குத் திரும்பிவிட்டார்.