ஒரே மாதிரி இரட்டையர்களுக்கிடையே விந்தக மாற்று அறுவை சிகிச்சை

பிறவியிலேயே விந்தகமின்றி பிறந்த 36 வயது ஆடவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு விந்தகம் பொருத்தப்பட்டுள்ளது. அவருடைய இரட்டைச் சகோதரரிடமிருந்து ஒரு விந்தகத்தை அவர் பெற்றுள்ளார்.

செர்பியாவைச் சேர்ந்த இந்த சகோதரர்கள் ஒரே மாதிரி இரட்டையர்கள் என்பதால் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளின்றி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருப்பதாக போஸ்டன் மருத்துவப் பள்ளியின் மருத்துவர் டிக்கன் கோ கூறியுள்ளார். 

பெல்கிரேடில் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையை உடனிருந்து மேற்கொள்வதற்காக அவர் போஸ்டனிலிருந்து பெல்கிரேடுக்குச் சென்றார்.

சுமார் 2 மணி நேரத்துக்கு இந்த அறுவை சிகிச்சை நீடித்ததாகக் கூறப்படுகிறது.

அருகருகே இருந்த அறைகளில் ஒரே நேரத்தில் அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சகோதரர்கள் இருவரும் நலமாக இருப்பதாகக் கூறப்பட்டது.

உலக அளவில் இது மூன்றாவது விந்தக மாற்று அறுவை சிகிச்சை என்று கூறப்படுகிறது. 

இதற்கு முந்தைய இரு விந்தக மாற்று அறுவை சிகிச்சைகளும் ஒரே மாதிரியான இரட்டையர்களுக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு செயின்ட் லூயிசில் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

அந்த இரட்டையர்களது நிலையும் தற்போது அறுவை சிகிச்சை செய்துகொண்ட இரட்டையகளின் நிலையைப் போன்றதே என்று கூறப்படுகிறது.

இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ நிபுணர்களை வழி நடத்திய மருத்துவர் மிரேஸ்லேவ் ஜோர்ஜெவிக், இரட்டைச் சகோதரிகளுக்கு இடையே கருப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கருப்பையைப் பெற்றுக்கொண்ட சகோதரிக்கு குழந்தை பிறந்தது என்பது கூடுதல் தகவல்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity