சுடச் சுடச் செய்திகள்

மலேசியா: அஸ்மின் அலியின் ஆதரவாளர்கள் வெளிநடப்பு

ஆயர் கரோ: மலேசியாவின் ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஓர் அம்சமான கெஅடிலான் கட்சிய அதன் மாநாட்டை நேற்று மலாக்காவில் நடத்தியது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் துணைத் தலைவரும் மலேசியப் பொருளியல் விவகார அமைச்சருமான அஸ்மின் அலியின் ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர். 

கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமின் ஆதரவாளர்கள் தங்களுக்கு எதிராகப் பேசியதை அடுத்து அதிருப்தி அடைந்த அஸ்மின் ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர். பிற்பகல் கூட்டம் தொடங்கியபோது அவர்கள் அனைவரும் மாநாடு நடைபெற்ற மண்டபத்தைவிட்டு வெளியேறினர். 

இதன் விளைவாக மண்டபத்தில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன.

மாநாட்டில் 3,000க்கும் மேற்பட்ட பிரமுகர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோர் முன் உரையாற்றிய கட்சித் தலைவர் என்கிற முறையில்  தமது முதல் கொள்கை உரையை நிகழ்த்திய திரு அன்வார், மலாய் வரலாற்றில் இடம்பெறும் ‘சி கித்தோல்’ எனும் துரோகியைப் பற்றி சாடை மாடையாகப் பேசினார். ஆனால் அஸ்மின் அலியை அவர் நேரடியாக தாக்கிப் பேசவில்லை.

ஆனால் கெடா மாநிலத்தின் கெஅடிலான் பிரதிநிதியும் அன்வார் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி அப்துலின் மகனுமாகிய ஃபிர்டாவோஸ் ஜொஹாரி திரு அஸ்மினை ‘உடன் செல்லும் அமைச்சர்’ என்று நையாண்டியுடன் குறிப்பிட்டதும் திரு அஸ்மின் பொறுமை இழந்தார். 

மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, மாமன்னர் அப்துல்லா அகமது ஷா ஆகியோர் மலேசியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுடன் செல்வதற்கு  அஸ்மின் நியமிக்கப்படுவதை இது குறிப்பிடும் வகையில் அமைந்தது.

“கடந்த புதன்கிழமையன்று திருஅன்வாரின் தரப்பும் திரு அஸ்மினின் தரப்பும் சண்டை நிறுத்தத்துக்கு இணங்கின. தனிப்பட்ட முறையில் எவ்வித தாக்குதல்களும் நடத்தப்படாது என்று இணக்கம் காணப்பட்டது. இந்த வாக்குறுதியை இளையரணி, மகளிரணி ஆகியவற்றுக்கான தொடக்க உரையின்போது திரு அஸ்மின் காப்பாற்றினார்,” என்று திரு அஸ்மினின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.

திரு அன்வார் தம்மை பாலியல் ரீதியாக தாக்கியதாக அவரது முன்னாள் உதவியாளர் குற்றம் சுமத்தியிருந்தார். ஆனால் கடந்த 

புதன்கிழமையன்று அந்தக் குற்றச்சாட்டை எதிர்த்து திரு அன்வாரைத் தற்காத்து திரு அஸ்மின் பேசியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மாநாட்டில் பேசிய திரு அன்வார், சீர்திருத்தங்களைத் தாமதப்படுத்திக் கொண்டே இருந்தால் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் நீடிக்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பக்கத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக அதற்கு முன்பு ஆட்சி பீடத்தில் இருந்த தேசிய முன்னணி பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்திவிட்டதாக திரு அன்வார் தெரிவித்தார்.

இந்தக் குளறுபடிகளை பக்கத்தான் ஹரப்பான் சரிசெய்ய வேண்டியிருப்பதை மலேசிய  அரசாங்கத்தைக் கடுமையாக  விமர்சிக்கும் மலேசியர்கள் உணர வேண்டும் என்றார் திரு அன்வார்.

வேலையின்மை, தேசிய உயர்கல்வி நிதி ஆகியவை குறித்து மலேசியர்கள் பலர் கவலைப்படுவதாகவும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று திரு அன்வார் வலியுறுத்தினார்.

“பணக்காரர்கள், மலாய்க்காரர்கள் சீனர்கள், இந்தியர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மலேசியர்களையும் சமமாகப் பார்க்க வேண்டும்,” என்றார் திரு அன்வார். மாநாட்டில் பேசிய மலேசிய துணைப் பிரதமரும் திரு அன்வாரின் மனைவியுமான வான் அசிசா வான் இஸ்மாயில், உட்கட்சி பூசல் முடிவுக்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon