வீட்டுப் பாடம் செய்யாததற்கு தண்டனையாக 10 வயது சிறுவனை பிச்சை எடுக்க வைத்த தந்தை

ஷங்ஹாய் ரயில் நிலையத்தில் அதிகாலை வேளையில் கடுங்குளிரில்
பள்ளிப் பையையும் சுமந்துகொண்டு மண்டியிட்ட நிலையில் தட்டை ஏந்தி உணவுக்காகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 10 வயது சிறுவனை போலிசார் கண்டனர்.

சிறுவன் வீட்டுப் பாடங்களை முடிக்கவில்லை என்று பள்ளி ஆசிரியர் அவனது தந்தையிடம் முறையிட்டதையடுத்து, சிறுவனின் தந்தை அவனுக்கு இந்தத் தண்டனையை நேற்று முன்தினம் (டிசம்பர் 10) விதித்ததாக Kankannews.com செய்தி இணையத்தளம் குறிப்பிட்டது.

சுமார் 45 நிமிடங்களுக்கு அந்தச் சிறுவன் அங்கு மண்டியிட்டபடி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் அதிகாலை 4.45 மணிக்கு போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. அதிகாலை 4 மணிக்கு வேலைக்குப் புறப்படுவதற்கு முன்பாக சிறுவனது தந்தை அவனை அங்கு விட்டுச் சென்றதாகக் கூறப்பட்டது.

இந்தச் செயலைச் செய்தபோது சிறுவனின் தந்தை குடிபோதையில் இருந்தாரா என்று கேட்கப்பட்டதற்கு, “இல்லை,” என்றான் சிறுவன்.

காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சூடான பானம், பிஸ்கட் போன்றவற்றைச் சிறுவனுக்கு அளித்த போலிசார் அவனது தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிருக்கான உடை ஒன்றுடன் அவர் அங்கு வந்தார்.

அவருக்கு அறிவுரை வழங்கிய போலிசாரிடம், சிறுவன் படிப்பில் சரிவர கவனம் செலுத்தாததால் அவனது தந்தை வருத்தம் அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டார் சிறுவனின் தாய். இருப்பினும் தனது கணவரின் இந்த நடவடிக்கையில் தனக்கு உடன்பாடில்லை என்றார் அவர்.

திருத்துகிறேன் என்ற பெயரில் சிறுவர்களைப் பிச்சை எடுக்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்ட அதிகாரிகள், அது சிறுவரின் சுய மதிப்பீட்டைக் குலைப்பதுடன் பொது ஆணைக்கும் பங்கம் விளைவிக்கும் என்றனர். 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

Loading...
Load next