ரோஹிங்யா  தலைவர் முஹமட் மொஹிபுல்லா: சூச்சி பொய் பேசுகிறார்

தி ஹேக்: மியன்மாரில் ரோஹிங்யா மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. 

இதையடுத்து அனைத்துலக நீதிமன்றத்தில் முன்னிலையான மியன்மார் அரசாங்கத்தின் தலைவர் ஆங் சான் சூச்சி தவறான தகவலின் அடிப்படையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது  என்றார்.

ராணுவம் தேவைக்கு அதிகமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் ரோஹிங்யா சம்பவம் தவறான வகையில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. ஊடுருவல்காரர்களுக்கு எதிரான போராட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக ரோஹிங்யா மக்கள் வெளியேறி பங்ளாதேஷில் தஞ்சம் அடைந்து  விட்டனர் என்று ஆங் சான் சூச்சி கூறினார்.

2017ல் ராணுவம் பல ஆயிரம் குடிமக்களைக் கொன்று பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்து வீடுகளுக்குத் தீ வைத்ததாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.

இந்த நிலையில் ஆங் சான் சூச்சியின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரோஹிங்யா மக்கள் தெரிவித்து உள்ளனர். 

இதன் தொடர்பில் பேசிய ரோஹிங்யா  தலைவர் முஹமட் மொஹிபுல்லா, “நாங்கள் கொடுத்த ஆதாரங்களை வைத்து படுகொலை நடந்ததா இல்லையா என்பதை உலகம் தீர்மானிக்கும்,” என்றார்.

“திருடன் எப்போதுமே தான் திருடன் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டான். 

“ஆனால் எங்களுடைய ஆதாரங்களுக்கு உரிய நீதி கிடைக்கும்,” என்று அரகான் ரோஹிங்யா அமைதி, மனித உரிமை சங்கத்தின் தலைவருமான முஹமட் மொஹிபுல்லா கூறினார்.

“சூச்சி பொய் சொன்னாலும் தப்ப முடியாது, நீதியை அவர் எதிர்நோக்கியே ஆக வேண்டும்,” என்றார் அவர்.