அபாயகரமான சூழ்நிலையில் ஆறு சடலங்கள் மீட்பு

அபாயகரமான சூழ்நிலையில் ஆறு சடலங்கள் மீட்பு

1 mins read
ceb291ed-f8bf-4e37-bd7b-10a6eac47116
நியூசிலாந்து கடற்படை ெவளியிட்ட படம் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட படகுகளைக் காட்டுகிறது. எரிமலை வெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. படம்: இபிஏ -

வாகாடேன்: நியூசிலாந்தின் 'ஒயிட் ஐலண்ட்' எரிமலை வெடிப்பில் கொல்லப்பட்ட 15 பேரில் ஆறு பேரின் உடல்களை நியூசிலாந்து மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

எரிமலை எந்த நேரத்திலும் மீண்டும் வெடிக்கலாம் என்ற ஆபத்தான சூழ்நிலையில் நேற்று மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

அதிவேகத்தில் மீட்புப் பணி திட்டமிடப்பட்டிருந்தது. ஓயிட் ஐலண்டில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கியதும் தயாராக இருந்த ராணுவத்தினர் செயலில் இறங்கினர்.

ஐம்பது விழுக்காடு எரிமலை வெடிக்கக்கூடிய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக ஆறு சடலங்களை மீட்டு கடற்படையின் ரோந்துப் படகுக்குக் கொண்டு வந்தனர் என்று நியூசிலாந்து போலிசார் தெரிவித்தனர்.

ஹெலிகாப்டர் தீவில் இறங்குவதற்கு முன்பாக சடலங்கள் இருக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டதால் மீட்புப் பணி துரிதகதியில் நடைபெற்றது.

"சிரமமான பணி, ஆனால் முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்," என்று நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டெர்ன் குறிப்பிட்டார்.

சுற்றுப் பயணிகளிடையே பிரபலமான எரிமலை கடந்த திங்கட்கிழமை அன்று வெடித்தது. தீப்பிழம்புகளையும் புகையையும் அது கக்கியது.

அப்போது எரிமலைக்கு அருகே ஆஸ்திரேலியா, ஜெர்மன், சீனா, பிரிட்டன், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 47 சுற்றுப் பயணிகள் இருந்தனர்.

இவர்களில் 15 பேர் வெடிப்பில் சிக்கி மாண்டனர். இருபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த னர்.