15,700 கி.மீ. தூர சைக்கிள் பயணம்; மெக்காவுக்குச் செல்லும் 62 வயது ஆடவர்

15,700 கி.மீ. தூர சைக்கிள் பயணம்; மெக்காவுக்குச் செல்லும் 62 வயது ஆடவர்

2 mins read
985662b3-18a3-4a51-9b0f-bac8d3166ade
சில நாடுகளைக் கடக்கும்போது அங்கு நிலவும் குளிரில் சைக்கிளோட்டுவது சவாலாக இருக்கும் என்று கூறிய திரு சிட்டெக், அதற்கேற்ற உடைகள், உபகரணங்கள், மருந்து போன்றவற்றையும் உடன் கொண்டு செல்வதாகச் சொன்னார். படம்: மலேசிய ஊடகம் -

முன்னாள் தீயணைப்பு வீரரான 62 வயது சிட்டெக் அகமது அலி என்பவர் தனது சொந்த ஊரான கிம்மாசிலிருந்து மெக்காவுக்கு சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்டுள்ளார்.

சுமார் 15,700 கிலோமீட்டர் தூர சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள இருக்கும் அவர், எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஹஜ் பெருநாளை மெக்காவில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார்.

மலேசியாவின் சிரம்பானிலுள்ள கிம்மாசிலிருந்து கோலா திரங்கானுவை அவர் 36 நாட்களில் அடைந்துள்ளார்.

மலேசியர்களால் அசாதாரணமான செயல்களைச் செய்ய முடியும் என்பதைக் காட்டும் முயற்சியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தனது பயணத்தின்போது வழியெங்கும் பலர் உற்சாகமூட்டியதைக் குறிப்பிட்டார்.

பேங்காக், தாய்லாந்து வழியாக யங்கூனை சைக்கிளில் அடையத் திட்டமிட்டுள்ள அவர், அங்கிருந்து விசைப்படகு மூலம் இந்தியாவின் கொல்கத்தாவுக்குச் செல்ல இருக்கிறார்.

அங்கிருந்து மீண்டும் சைக்கிள் பயணம் தொடங்கும். புதுடெல்லி, இஸ்லாமாபாத், காபூல், தெஹ்ரான், துபாய் வழியாக மெக்காவை அடைவது அவரது திட்டம்.

இந்தப் பயணத்துக்காக பயிற்சிகள் மூலம் உடலைத் தயார்ப்படுத்தி இருப்பதாகவும், இதற்கு முன்பு நெடுந்தூர சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆலோசனை பெற்றிருப்பதாகவும் கூறினார் திரு சிட்டெக்.

பாதுகாப்புக் கருதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே சைக்கிளில் செல்லும் இவர், ஆங்காங்கிருக்கும் பள்ளிவாசல்களில் தங்கிக்கொள்வதாகச் சொன்னார்.

சில நாடுகளைக் கடக்கும்போது அங்கு நிலவும் குளிரில் சைக்கிளோட்டுவது சவாலாக இருக்கும் என்று கூறிய திரு சிட்டெக், அதற்கேற்ற உடைகள், உபகரணங்கள், மருந்து போன்றவற்றையும் உடன் கொண்டு செல்வதாகச் சொன்னார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்