மகாதீர்: 2020க்குப் பிறகும் நானே பிரதமர்

மகாதீர்: 2020க்குப் பிறகும் நானே பிரதமர்

1 mins read
de3c96fc-f167-4c08-a843-e23fb554d22c
அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் என்று கூறிவந்த பிரதமர் மகாதீர் தற்போது பிரதமராக யார் வருவார்கள் என்பது தமக்குத் தெரியாது என்று டோஹா கருத்தரங்கில் கூறியுள்ளார். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

டோஹா: 2020ஆம் ஆண்டுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் தான் நீடிக்க வாய்ப்புள்ளது என்று பிரதமர் மகாதீர் முஹமது தெரிவித்துள்ளாார்.

கத்தாரில் நடைபெற்ற டோஹா கருத்தரங்கில் பங்கேற்ற டாக்டர் மகாதீரிடம் முன்னர் கூறியதுபோல 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு பதவியிலிருந்து விலகுவீர்களா என கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், பதவி விலகுவதற்கு முன்பாக முன்னைய அரசாங்கம் உருவாக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரும்புவதாகத் தெரிவித்தார்.

தமக்குப் பிறகு யார் பிரதமராக வருவார்கள் என்பதற்கும் தம்மால் உத்தரவாதமளிக்க முடியாது என்றார் அவர்.

இம்மாதம் 10ஆம் தேதி கோலாலம்பூரில் பேசிய பிரதமர் மகாதீர், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளபோதும் அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்கப் போவதாகக் கூறியிருந்தார்.

2020 நவம்பரில் 'ஏபெக்' எனும் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாடு மலேசியாவில் நடைபெறுவதால் அதுவரை தாம் பிரதமர் பொறுப்பில் நீடிக்க விரும்பு வதாகவும் அவர் கூறினார்.

தற்போது 2020ஆம் ஆண்டுக்குப் பிறகும் தாம் பிரதமர் பதவியில் நீடிக்கலாம் என்றும் பிரதமர் பொறுப்புக்கு யார் வருவார் என்பது தமக்குத் தெரியாது என்றும் பிரதமர் மகாதீர் கூறியிருப்பது அன்வார் இப்ராஹிம் தலைமையிலான கெஅடிலான் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.