மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வார இறுதியில் ஜெட்ஸ்டாரின் 90க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
கடந்த வெள்ளிக் கிழமை அன்று நாட்டிலுள்ள விமான நிலையங்களில் சேவை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது.
இதற்கு ஆதரவாக ஆஸ்திரேலிய விமானிகள் சம்மேளனமும் களத்தில் இறங்கியது.
இந்த நிலையில் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை சமாளிக்க ெஜட்ஸ்டார் நிர்வாகம், சில சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கி வருகிறது.
இருந்தாலும் நேற்று 44 விமான சேவைகளும் இன்று 46 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
ஜெட்ஸ்டார் நாளொன்றுக்கு 370 சேவைகளை வழங்கி வருகிறது.
அதிக ஓய்வு நேரம், 12 மணி நேர பணிகளுக்கு இடையே போதுமான இடைவெளி, ஆண்டுதோறும் நான்கு விழுக்காடு சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஜெட்ஸ்டார் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே மெல்பர்னில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெட்ஸ்டார் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேரத் இவான்ஸ், வேலை நிறுத்தத்தால் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள நிதி பாதிப்புகளை பற்றி தெரிவிக்க மறுத்து விட்டார்.
“வேலை நிறுத்தம் எத்தனை நாளுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் ஊழியர்களுடன் விரைவில் உடன்பாடு செய்து கொள்ள விரும்புகிறோம்,” என்று அவர் சொன்னார்.