நேப்பாளத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்ததில் 14 பயணிகள் மாண்டனர். அவர்களில் மூவர் குழந்தைகள். 18 பேர் படுகாயமடைந்தனர்.
அங்குள்ள சிந்துபால்சோக் மாவட்டத்தில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது. கலின்சோக் பகுதியிலிருந்து பக்தாபூர் நோக்கிச் சென்றுகொண்டு இருந்த பேருந்து திடீரென்று சாலையிலிருந்து சறுக்கி 100 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விழுந்தது.
ஓட்டுநர் படுவேகமாகவும் கண்மூடித்தனமாகவும் பேருந்தை ஓட்டியது விபத்துக்குக் காரணம் என்று ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து ஏற்பட்டதும் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியதாகத் தெரிகிறது. அவரைத் தேடும் பணியில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
மாண்டோரில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காட்மாண்டு போஸ்ட் செய்தித்தாள் குறிப்பிட்டது. இருப்பினும் மாண்ட 14 பேரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றது அச்செய்தி. காயமுற்றோரில் மூவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக காவல்துறை அதிகாரி நவராஜ் நெயுபான் கூறினார்.
விபத்து நிகழ்ந்த நேரத்தில் பேருந்தில் 40 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட விதம் குறித்த விசாரணையை போலிசார் தொடங்கி உள்ளனர்.
சிந்துபால்சோக் மாவட்டத்தில் ஒரு மாதத்திற்குள் நிகழ்ந்திருக்கும் இரண்டாவது விபத்து இது. சென்ற மாதம் சன்கோஷி ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் மாண்டனர்.