மணிலா: பிலிப்பீன்சில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்த தாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
நிலநடுக்கத்தின்போது பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் பெருமளவு சேதம் ஏற்பட்டதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அண்மைய மாதங்களில் தெற்கு பிலிப்பீன்சை உலுக்கிய தொடர் நிலநடுக்கங்களில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்தது என்று கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தின்போது ஒரு சுவர் இடிந்துவிழுந்ததில் 6 வயதுச் சிறுமி உயிரிழந்ததாக நகர மேயர் ஒருவர் கூறினார்.
நேற்று ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மிண்டானோ தீவின் டாவோ நகரின் தென்மேற்கில் 61 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார். நிலநடுக்கத்தின்போது அரசாங்க அலுவலகம் உட்பட பல கட்டடங்கள் சேதம் அடைந்த தாகவும் முக்கிய சாலைகள் பழுதடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். இதே பகுதியில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
டாவோ நகரைச் சேர்ந்த அந்நாட்டு அதிபர் டுட்டர்டே நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டபோது அவரது வீட்டில் இருந்ததாகவும் அவருக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அதிபரின் பேச்சாளர் கூறினார்.
நிலநடுக்கத்தின்போது பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.