சோல்: வடகொரியாவிற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் பீகன், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி வடகொரியாவை வலியுறுத்தியுள்ளார்.
அண்மைய வாரங்களாக வடகொரியா தொடர்ந்து ஆயுதச் சோதனை நடத்தி வருவதாலும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை வசைபாடி வருவதாலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதையடுத்து, அமெரிக்காவும் வடகொரியாவும் மீண்டும் முட்டிக்கொள்ளுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் அமெரிக்கா தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொள்ள வேண்டும் என கெடு விதித்துள்ள வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், இல்லையெனில் வடகொரியா ‘புதிய பாதை’யில் செல்லும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், தென்கொரியத் தலைநகர் சோலை நேற்று முன்தினம் சென்றடைந்த திரு பீகன், திரு கிம்மின் கெடுவை நிராகரித்தார்.
அதே நேரத்தில், வடகொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்ளக்கூடும் என அனுமானிக்கப்படுகிறது.
வடகொரியாவின் அணுஆயுதக் களைவு தொடர்பாக கடந்த ஆண்டில் இருந்து டிரம்ப்பும் கிம்மும் மூன்று முறை சந்தித்துவிட்டனர். ஆனாலும், பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை.
இதற்கிடையே, அமெரிக்காவின் அணுஆயுத அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்குடன் மேலும் ஓர் ஆயுதச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக வடகொரிய அரசு ஊடகம் நேற்று முன்தினம் அறிவித்தது. இது தொடர்பில், தென்கொரியா கவலை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை நேற்று சந்தித்துப் பேசினார் திரு பீகன். அண்மைய வாரங்களாக வடகொரிய அதிகாரிகள் வெளியிட்டு வரும் அறிக்கைகளுக்காக வருத்தம் தெரிவித்த அவர், அது தேவையற்றது என்றும் இப்போதும் தாமதமாகி விடவில்லை என்றும் குறிப்பிட்டார்.