ஹாங்காங்: ஆசியாவின் நிதி மையமாகத் திகழும் ஹாங்காங் இன்னும் குழப்பநிலையில் இருந்து விடுபடவில்லை என்று சீனப் பிரதமர் லீ கெச்சியாங் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரிட்டிஷ் காலனித்துவ பகுதியான ஹாங்காங்கில் நிலவும் அரசியல் குழப்பநிலை ஏழாவது மாதத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாமை நேற்று திரு லீ சந்தித்துப் பேசினார்.
“சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியான ஹாங்காங்கில் வன்முறைக்கு முடிவுகட்டி, அங்கு ஏற்பட்டுள்ள குழப்பநிலைக்குத் தீர்வுகண்டு, சட்ட, ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அந்நகர நிர்வாகம் தொடர்ந்து முயல வேண்டும்,” என்று திரு லீ வலியுறுத்தினார்.
ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடந்து வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் சீனாவிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இந்த அரசியல் குழப்பநிலையால் சில நேரங்களில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலும் உரசல் ஏற்பட்டது.
ஹாங்காங் அரசியல் குழப்பநிலைக்கு முடிவுகட்டும் வகையில் சீன அதிபர் ஸி ஜின்பிங் புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கேரி லாம் - லீ கெச்சியாங் இடையிலான சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் ஷங்ஹாயில் திருவாட்டி கேரி லாமைச் சந்தித்தபோது அவர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக திரு ஸி கூறியிருந்தார்.
ஹாங்காங்கில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்றும் வன்முறையைக் கட்டுப்படுத்தி, சட்ட, ஒழுங்கை நிலைநாட்டுவதே முதல் பணி என்றும் திருவாட்டி லாம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கிட்டத்தட்ட இரு வாரங்களுக்குப் பிறகு போராட்டக்காரர்கள் மீது ஹாங்காங் போலிசார் நேற்று முன்தினம் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். முகக்கவசம் அணிந்தபடி வந்த இளையர்கள், ஹாங்காங்கின் மோங் கோக் மாவட்டத்தில் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தினர். இதையடுத்து, போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதோடு போராட்டக்காரர்களைக் கலைக்க தடியடியும் நடத்தினர்.
சாலைகளில் பொருட்களைப் போட்டுத் தீ வைத்த போராட்டக்காரர்கள், போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளையும் அடித்து நொறுக்கினர். அவர்கள் போலிசை நோக்கி கற்களை வீசினர். பதிலுக்கு போலிசார் எறிந்த கற்களில் ஒன்று மாணவச் செய்தியாளரின் முகத்தைப் பதம் பார்க்க, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.