கர்ப்பமானதைத் தெரிவித்த காதலியைக் கொன்ற மாணவரை இந்தோனீசிய போலிசார் கைது செய்துள்ளனர்.
இருவரும் மக்காசர் ஸ்டேட் இஸ்லாமிக் பல்கலைக்கழகம் (UIN) அலாவுதீன் எனும் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள். இருவருக்கும் வயது 21.
மாணவி அவரது படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக மக்காசர் போலிஸ் உயர் அதிகாரி யுதியாவான் விபிசோனோ நேற்று (டிசம்பர் 16) தெரிவித்தார்.
மாணவியின் முகத்தில் அவரது காதலர் தலையணையைக் கொண்டு அழுத்தியதாகவும் கூறப்பட்டது.
மாணவியின் இறுதிச் சடங்கில் சந்தேக நபரான ரிதயத்துல் கெய்ர் கைது செய்யப்பட்டார்.
மாணவியைக் கொன்றதை ரிதயத்துல் விசாரணையின்போது ஒப்புக்கொண்டதாக போலிசார் தெரிவித்தனர்.
தாம் நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு குடும்பத்தினரிடம் இதுபற்றிக் கூறுமாறும் தன்னை அந்தப் பெண் மிரட்டியதால் கோபமடைந்து கொலை செய்ததாக அவ்விளையர் சொன்னார் என்றார் அந்த அதிகாரி.
கொலையுண்ட பெண்ணின் வீட்டுக்கு அருகில் இருந்த நதி ஒன்றின் கரையில் வீசப்பட்ட கத்தி உட்பட சம்பவம் தொடர்பான ஆதாரங்களைக் கண்டுபிடித்திருப்பதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொலை செய்தது நிரூபிக்கப்பட்டால், திட்டமிட்டு கொலை செய்ததற்காக குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவு 340ன் கீழ் ரிதயத்துல்லுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity