சோல்: வடகொரியா மீதான குறிப்பிட்ட சில ஏற்றுமதித் தடைகளை விலக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சீனாவும் ரஷ்யாவும் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளன.
வடகொரியாவின் கடல் உணவு மற்றும் ஜவுளிகள் மீதான ஏற்றுமதித் தடையை நீக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் வெற்றி பெற 9 வாக்குகள் தேவைப்படுகின்றன. இந்தத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு எப்போது என்பது குறித்த தகவல் ஏதும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் இது குறித்து ஐ.நா.வுக்கான ரஷ்யத் தூதர் கூறும்போது, ‘’நாங்கள் எதனையும் அவசரப்படுத்தவில்லை.
“நாங்கள் இதனை வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனையுடன் தொடர்புபடுத்தவில்லை. இது மனிதாபிமான பிரச்சினை,’’ என்றார்.
மேலும், அமெரிக்கா - வடகொரியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கப்
படுவதற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை இருக்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
முன்னதாக, வடகொரியா ஏவுகணை சோதனையில் இறங்கியுள்ளது என்று தென்கொரியா விமர்சித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியாவுக்கும் கிம்முக்கும் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இதற்கிடையே. அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீபன் பீகன் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் கொரிய தீபகற்ப அமைதி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான தென்கொரிய சிறப்பு தூதர் லீ டோ ஹூனை சந்தித்து பேசினார்.