கொழும்பு: கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கையின் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் திங்கள் அன்று கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அவர் விசாரணையில் வைக்கப்படுவார். அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் திங்களன்று ஆறாவது நாளாகவும் குற்றப் புலனாய்வுத் துறையில் வாக்குமூலம் வழங்கினார். பின் மருத்துவப் பரிசோதனைகளுக்காக தேசிய மனநல மருத்துவச் சேவைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட அவரை பொய் சாட்சியமளித்து அரசை அசௌகரியத்திற்குள்ளாக்கியது தொடர்பில் கைது செய்யுமாறு தலைமை நீதிபதி ஆலோசனை வழங்கியதை அடுத்து கைது செய்யப்பட்டார்.
கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் இலங்கை நாட்டவரான கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் கடந்த மாதம் 25ஆம் தேதி கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகவும் தூதரகத்தின் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் சுவிட்சர்லாந்து, இலங்கை அரசாங்கத்திடம் முறையிட்டு இருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து தூதரகத்துக்கும் தமக்குப் எந்தவித முரண்பாடுகளும் கிடையாது என கோத்தபய கூறியுள்ளார்.