பல தரப்பு வர்த்தக முறையை நிலைநாட்டி அதற்கு புதுத்தெம்பு அளிக்க வேண்டும் என்று ஆசியா-ஐரோப்பா வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்கள்.
பருவநிலை மாற்றம், தாராள வர்த்தகம், பொருளியல் ஒருங்கிணைப்பு, தொடர்பு, விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக ஒழுங்குமுறை ஆகிய பிரச்சினைகளில் பங்காளித்துவ உறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரவேண்டும் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் 14வது ஆசியா-ஐரோப்பா வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பால
கிருஷ்ணனும் கலந்துகொண்டார்.
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான பொருளியல் ஒத்துழைப்பு, தாராள வர்த்தகம், விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பலதரப்பு வர்த்தக முறை ஆகியவற்றுக்கான ஆதரவை ஐரோப்பா, ஆசியா வெளியுறவு அமைச்சர்கள் மறுஉறுதிப்படுத்தியதாக டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
உலகில் இப்போது நிச்சயமில்லாத நிலவரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இத்தகைய ஒரு சூழலில் இந்தக் கோட்பாடுகளை மேலும் பலப்படுத்த வேண்டியது மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வைப் பேணி வளர்ப்பதற்கு உதவும் சாதாரண நிலையிலான பேச்சுவார்த்தையை நடத்தத் தோதான ஒரு தளமாக ஆசியா-ஐரோப்பா கூட்டம் திகழ்கிறது என்றும் இந்த வகையில் அந்தக் கூட்டம் சீரிய பங்காற்றுகிறது என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அந்தக் கூட்டத்தையொட்டி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களுடன் டாக்டர் விவியன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களையும் அவர் சந்தித்தார். பொதுவான சவால்கள், வட்டார, அனைத்துலக நிலவரங்கள் தொடர்பில் பரந்த அளவில் அவர்கள் பலவற்றையும் விவாதித்தனர்.
ஒத்துழைப்பை மேம்படுத்துவதற் கான வழிகள் பற்றியும் அவர்கள் பேசியதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ஆசியா-ஐரோப்பா கூட்டம் என்ற ஓர் ஏற்பாட்டை 1996ல் அப்போது சிங்கப்பூரின் பிரதமராக இருந்த கோ சோக் டோங்கும் அப்போதைய பிரெஞ்ச் அதிபரான சிராக்கும் உருவாக்கினர்.
அந்தக் கூட்டத்தில் ஆசியா, ஐரோப்பாவைச் சேர்ந்த 53 நாடுகள் பங்கெடுக்கின்றன. டாக்டர் விவியன் மேட்ரிட் நகரிலிருந்து இத்தாலிக்கும் வத்திகன்
நகருக்கும் செல்கிறார்.