பாலியல் பலாத்கார வழக்கில் ஜப்பானின் பிரபல தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கு 3.3 மில்லியன் யென் (S$41,000) இழப்பீடு விதிக்கப்பட்டு உள்ளது. அத்தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நோரியுகி யமகுச்சி, 53, என்னும் அந்த ஆடவர் கடந்த 2015ஆம் ஆண்டு தாம் மயக்கத்தில் இருந்த நேரத்தில் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஷியோரி இட்டோ, 30, என்னும் செய்தியாளர் புகார் கூறியிருந்தார்.
குற்ற வழக்கு தொடுப்பதற்கு போதுமான ஆதாரம் இல்லாததால் இது சிவில் வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. எனவே தொலைக்காட்சி நிருபர் சிறைத் தண்டனை இன்றி இழப்பீட்டுத் தொகையுடன் தப்பித்தார்.
பாலியல் புகார்கள் மிக அரிதாக செய்யப்படும் ஜப்பானில் பாலியல் பலாத்கார புகார் மூலம் ‘மீ டூ’ (#MeToo) இயக்கத்தின் பிரபலமானார் இட்டோ.
தீர்ப்பு வெளியானதும் ‘மிக்க மகிழ்ச்சி’ என்று கூறினார் அந்தப் பெண். மேலும் ‘வெற்றி’ என்னும் பொருள்படும் வாசகத்தை அவர் ஏந்தி இருந்தார்.
அபராதம் விதிக்கப்பட்ட யமகுச்சி, செய்தியாளர்களிடம் பேசுகையில் தம் மீதான பாலியல் புகாரை மீண்டும் மறுத்தார். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் ஷின்ஸோ அபேயுடன் நெருக்கம் வைத்திருப்பதாகக் கூறப்படும் யமகுச்சி, 2015ல் வேலைவாய்ப்பு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று தம்மை இரவு உணவுக்கு அழைத்ததாக அப்போது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பயிற்சியாளராக வேலை செய்த இட்டோ கூறினார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity