அமெரிக்க ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள பகிரங்கப் போர் என தம் மீதான தகுதி நீக்க விசாரணை குறித்து அமெரிக்க பிரிதிநிதிகள் சபைத் தலைவரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான நேன்சி பெலோசிக்கு எழுதிய ஆவேசமான கடிதத்தில் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
“தகுதி நீக்கம் என்ற அருவருக்கத்தக்க வார்த்தையை நீங்கள் ெகாச்சைப்படுத்தி விட்டீர்கள்,” என்று அவர் தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது அரசியல் சயநலத்துக்காக உக்ரேன் அரசுக்கு ெநருக்குதல் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தகுதி நீக்க விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி கூறி வருகிறது.
இதற்கான வாக்கெடுப்பு நேற்றிரவு நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் செனட் சபையில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட ஒன்று என்று பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
தமக்கு எதிராக விசாரணை மேற்கொள்வது உறுதியாகிவிட்ட நிலையில் டிரம்ப், பிரிதிநிதிகள் சபைத் தலைவர் பெலோசிக்கு எதிராக ஆறு பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில் அவர் இந்த தகுதி நீக்க வழிமுறையைச் சாடியிருக்கிறார் என்றும் அதை ஆரம்பித்து வைத்த பெலோசியை கடுமையான வார்த்தைகளால் தாக்கியிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கடிதத்தில் திரு டிரம்ப் தமக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள சட்ட வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் இந்த தகுதி நீக்க விசாரணை ஒரு மோசடி என்றும் கூறியிருக்கிறார். அத்துடன், தமது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் சாட்சியங்களைச் சமர்ப்பிக்க உரிமையும் தமக்கு மறுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பிரதிநிதிகள் சபையின் நடவடிக்கையின் எதிரொலியாக அதிபர் டிரம்ப்பின் இந்தக் கூற்று முக்கியமானது என்று கூறப்படு கிறது. அவர் ஏற்கெனவே வெள்ளை மாளிகையின் முக்கிய உதவியாளர் களை சபையில் சாட்சியமளிக்க ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
எனினும், அதிபர் டிரம்ப் நீதித் துறை குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார் என்றும் அவர் அதை ஏற்றுக்கொண்டிருந்தால் அவரது வழக்கறிஞர்கள் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பர் என்றும் பிபிசி செய்தி விளக்கியது.