பேங்காக்: ‘பொருத்தமற்ற’ புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டதன் தொடர்பில் ஆடவர் ஒருவரை தாய்லாந்து போலிசார் கைது செய்துள்ளனர். அந்தப் படம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்டது என கூறப்பட்டது.
மார்ச் மாதத் தேர்தலுக்குப் பிறகு தாய்லாந்தில் கடந்த சனிக்கிழமை மாபெரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. டௌன்டவுன் பேங்காங் என்னும் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு பேரணி நடத்தினர். ‘எஃப் எஃப் பி’ என்னும் எதிர்க்கட்சியின் தலை வரும் தொண்டர்களும் பேரணியை வழிநடத்தினர்.
‘சர்வாதிகாரி’ என்றும் ‘பிரதமர் பிரயுட் சான்-ஒ-சா உடனே பதவி விலக வேண்டும்’ என்றும் எழுதப்பட்ட அட்டைகளை அவர்கள் ஏந்திச் சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அமைதியாக அப்பேரணி நடைபெற்றது. அப்பேரணியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் பகிர்ந்துகொள்ளப்பட்டது குறித்து கருத்து கூறிய மின்னிலக்கப் பொருளியல், சமூக அமைச்சர் புத்திபொங்சே புன்னகன்டா, “தாய்லாந்து மக்களைப் புண்படுத்தக்கூடிய பொருத்தமற்ற புகைப்படம் அது,” என்றார். மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் சுவரோவியம் அந்தப் படத்தின் பின்னணியில் காணப்பட்டது.
இருப்பினும் கைது செய்யப்பட்டவரின் விவரங்களை அமைச்சரோ போலிசாரோ வெளியிடவில்லை.