மக்காவ்: மக்காவ் வட்டாரம் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவையொட்டி சீன அதிபர் ஸி ஜின்பிங் மூன்று நாள் வருகையாக அங்கு சென்றுள்ளார்.
ஹாங்காங் ஜனநாயக ஆதரவு போராட்டங்கள் காரணமாக அதிபருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இவரது வருகை முன்னைய போர்ச்சுக்கீசிய காலனி பகுதியான மக்காவின் நிலைத்தன்மையையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மக்காவ் மேம்பாட்டை ஆதரிக்கும் பல்வேறு கொள்கை அறிவிப்புகளை அதிபர் ஸி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்காவ் பொருளியல் சூதாட்ட கேளிக்கைக் கூட வருமானத்தைச் சார்ந்துள்ள நிலைமையை மாற்றி நிதி மையமாக உருமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைளை அவர் அறிவிப்பார் என்றும் யுவான் நாணய ஆதிக்கம் கொண்ட பங்குச் சந்தை உள்ளிட்டவை அந்த நடவடிக்கைகளுள் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.
அதிபர் ஸியின் மக்காவ் சுற்றுப்பயண விவரம் முழுமையாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும் பெய்ஜிங் ஆதரவு பெற்ற தலைவரான ஹோ இயட் செங்கின் நாளைய பதவி ஏற்பு நிகழ்வில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்காவ் வட்டாரம் 1999 டிசம்பர் 20ஆம் தேதி சீனாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. ஹாங்காங் நகரைப்போலவே தன்னாட்சியைப் பாதுகாப்பதற்கான ‘ஒரே நாடு இரு ஆட்சிமுறை’ கட்டமைப்பின் அடிப்படையில் அந்த ஒப்படைப்பு நடைபெற்றது.
மக்காவ்வின் 620,000 மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடந்த பத்து, இருபது ஆண்டுகளில் சீனாவிலிருந்து வந்து குடியேறியவர்கள். எனவே இங்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவது என்பது அரிது.