யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விஷயமாக இருக்கலாம் என அந்நாட்டின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய போது அவர் இதைத் தெரிவித்தார்.
“ 1987ஆம் ஆண்டு இலங்கை -இந்திய ஒப்பந்தம் கையெழுத்தி டப்பட்டது. அது ஓர் அனைத்துலக ஒப்பந்தம். தன்னிச்சையாக ஒரு நாடு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது. அது நிறைவேற்றப்பட வேண்டும். அது ஓர் அனைத்துலகக் கடமை.
“1988ஆம் ஆண்டு 13ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் அரசியல் சாசன ரீதியாக ஏற்பட்ட முதல் ஆட்சி அதிகாரங்களைப் பொறுத்தவரையில் ஒரு திருத்தம். அது இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். அது நிறைவேற்றப்படுமென்று பல வாக்குறுதி
களைப் பல அரசாங்கங்கள் கொடுத்திருக்கின்றன. அவற்றை அவர்கள் இன்னமும் நிறைவேற்றவில்லை.
“தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி புரிந்தன. அது ஒரு நிபந்தனையின் அடிப்படையில்தான்.
“தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிறகு நாங்கள் ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண்போம் என்று இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால் தற்பொழுது அந்த வாக்குறுதிகளிலிருந்து தப்பிக்க அது முயல்கிறது.
“இதற்கு அனைத்துலகச் சமூகம் இடமளிக்கக்கூடாது. அனைத்துலகச் சமூகம் இடம் அளித்தால் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களும் உதவுகின்றார்கள் என்றுதான் பொருளாகி விடும். அந்த நிலைமை ஏற்படக்கூடாது.
“செய்துகொண்ட ஒப்பந்தப்படி சிவில், அரசியல் பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளின் அடிப்படையில் எங்களுக்குச் சுயநிர்ணய உரிமையுண்டு. இதை அனைத்துலகச் சமூகம் வலியுறுத்த வேண்டும்.
“நாங்கள் எவரையும் பகைவராகக் கருதவில்லை. பகைமை எங்களுக்கு வேண்டாம். ஆனால் எங்கள் மக்களின் உரிமைகளைக் கடைசி வரையிலும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் திரு சம்பந்தன்.