மக்காவ்: தனது சிறப்பு வட்டாரங்களான ஹாங்காங், மக்காவ்வில் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளார் சீன அதிபர் ஸி ஜின்பிங்.
மக்காவ்வை சீன ஆட்சிக்கு ஒப்படைத்ததன் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவில் பேசிய ஸி இவ்வாறு சொன்னார்.
முன்னாள் போர்ச்சுகீசிய காலனியின் தேசபக்தி மற்றும் விசுவாசத்திற்காக பாராட்டிய அவர், ஹாங்காங்கில் ஆறு மாதங்களாக நடைபெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நேரடியாகக் குறிப்பிடவில்லை.
“சீனாவுடன் மீண்டும் இணைக்கப்பட்ட இரண்டு சிறப்பு நிர்வாக பிராந்தியங்களான ஹாங்காங் மற்றும் மக்காவ் விவகாரங்களை கையாள்வது முற்றிலும் சீனாவின் உள்விவகாரங்கள். எனவே வெளிநாட்டு சக்திகளுக்கு வேலையில்லை. எந்தவொரு வெளி சக்திகளும் தலையிட நாங்கள் அனுமதிக்கவில்லை,” என்றார் அவர்.
ஹாங்காங்கைப் போலவே 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘ஒரே நாடு, இரண்டு ஆட்சி’ என்ற முறையில் மக்காவும் சீனாவுடன் இணைந்தது.
தங்களது சுதந்திரத்தில் பெய்ஜிங் தலையிடுவதாக ஹாங்காங்கில் கடந்த ஆறு மாத காலமாக போராட்டம் நடந்தது.
ஹாங்காங் தன்னாட்சியில் பெய்ஜிங் தலையிடுவதாகக் கூறப்படுவதை மறுக்கும் சீனா, ஆசிய பொருளாதார சந்தையைக் குலைக்க வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடு சக்திகள் ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னணியில் உள்ளதாகக் குற்றம் சாட்டுகிறது.