மாஸ்கோ: ஒருவரைப் பலிவாங்கிய ரஷ்ய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவரை போலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
மாஸ்கோவில் மத்திய பாதுகாப்பு சேவை தலைமையகத்தின் அருகில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மத்திய பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். ஐவர் காயமடைந்தனர்.
தானியங்கி துப்பாக்கியைக் கொண்டு 39 வயது ஆடவரான யெவ்ஜெனி மன்யூரோவ் என்பவர் தனியாக அத்தாக்குதலை நடத்தியதாக போலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் அவன் தெற்கு மாஸ்கோவில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போடோல்ஸ்க் நகரில் வசித்து வந்தார் என்றும் அறியப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பற்றிய இந்தத் தகவல்களை போலிசாரை மேற்கோள்காட்டி ரஷ்ய அரசாங்கத்தின் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவன் தங்கியிருந்த இடத்தில் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்திய போலிசார், அங்கு வசித்து வந்த மன்யூரோவின் தாயை விசாரணைக்காக தடுத்து வைத்தனர். மேலும் சோதனையின்போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்து துப்பாக்கிகளையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.
பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த தன் மகன் அண்மையில் வேலையிழந்ததாகவும் நண்பர்கள் யாரும் ஒருபோதும் வரவில்லை என்றும் அத்தாய் கூறியதாக ஊடக செய்தி தெரிவிக்கிறது.
வேலையிழந்தது முதல் சில அராபுக்களுடன் தன் மகன் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவர் சொன்னார்.
தன் மகன் துப்பாக்கி மீது அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகவும் கிளப் ஒன்றில் வழக்கமாக துப்பாக்கி சுடும் பயிற்சிக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, துப்பாக்கியை இயக்கியபோது மன்யூரோ, ஐஎஸ் தொடர்புடைய வாசகங்களைக் கத்தியதாக சாட்சிகள் கூறியதாக உள்ளூர் செய்தி கூறுகிறது.
குறிப்பிட்ட கிளப்பில் மூன்று மாதங்களாக மன்யூரோ பயிற்சி பெற்று வந்ததாக அவரின் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.